நீட் தேர்வுக்கு இரண்டாவது பலி: தேர்வு எழுதிய பின் தற்கொலை செய்து கொண்ட மாணவி!
- IndiaGlitz, [Tuesday,September 14 2021]
கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று போராடி வரும் நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய மாணவர் தனுஷ் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பின்னர் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தங்களது மகளை டாக்டராக காண போகிறோம் என கனவு கண்ட கனிமொழியின் பெற்றோர் அவரை பிணமாக கண்ட சோகத்தில் அதிர்ச்சியில் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீர் வரவழைத்தது. இந்த நிலையில் கனிமொழி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முன்னர் ஒரு மாணவரும், நீட்தேர்வு பின்னர் ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது தீர்வு அல்ல எந்த சோதனையும் எதிர்கொள்ள மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழக்கப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.