நீட் தேர்வு அச்சம்: அரியலூர் மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை!
- IndiaGlitz, [Wednesday,September 09 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவும் சற்றுமுன் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் வரும் 13ஆம் தேதி நீட் தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் ஒருவர் திடீரென மன அழுத்தம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி என்ற பகுதியை சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் கோவையில் இதேபோன்று நீட் தேர்வு அச்சத்தால் சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை மாணவ, மாணவிகளை உயிர்ப்பலி கொடுத்து அந்த நீட் தேர்வை கண்டிப்பாக நடத்தியே தீரவேண்டுமா? என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது