இவங்க வேறலேவல்… நடந்தே அலுவலகத்திற்கு வந்த பெண் கலெக்டர்!
- IndiaGlitz, [Monday,December 13 2021]
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் அனைவரும் வாகனங்களைத் தவிர்த்து மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் மிதிவண்டியை விட நடந்தே அலுவலகத்திற்கு வருவது இன்னும் கூடுதல் சிறப்பு எனக் காட்டியிருக்கிறார் அரியலூர் பெண் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி.
முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட அட்சியர் ரமண சரஸ்வதி இன்று தனது இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே வந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மேலும் இன்று மதியம் மற்றும் மாலை வேளையிலும் கூட அவர் நடந்தே செல்வார் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. மேலும் வாரத்தில் ஒரு நாள் இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் ரமண சரஸ்வதி திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மிதிவண்டியில் தனது அலுவலகத்திற்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.