தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகிறதா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தொற்றை அடுத்து கடந்த 7 மாதங்களாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலும் தளர்த்தப் பட்டுள்ள நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வருகிற 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் எனக் கூறப்பட்டு இருந்தது. அதில் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் மீண்டும் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகப் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கி இருக்கிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப் படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும்போது மீண்டும் அதிக தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில் அரசு இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருககிறது.
இந்நிலையில் நேற்று மாலை தமிழக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அசோக் வரதன் ஷெட்டி நேற்று தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து மீண்டும் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே கொரோனா தொற்று, பண்டிகைகாலம் மற்றும் பருவமழை போன்ற காரணங்களை ஒட்டி தமிழக அரசு பள்ளி, கல்லூரி திறப்புகளை மீண்டும் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பொங்கலுக்குப் பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது போன்ற ஒரு விவாதங்களும் பொதுவெளியில் உலா வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதுகுறித்த எந்த விளக்கத்தையும் இதுவரை வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments