இனி பயப்படாமல் கலப்பு திருமணம் செய்யலாம்!!! கேரள அரசின் புதிய நடவடிக்கை
- IndiaGlitz, [Friday,March 06 2020]
சாதி, மதம் மாறி கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கேரள அரசு காப்பகங்களை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது. தொடரும் ஆணவக் கொலைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கேரள அரசின் இந்நடவடிக்கை தற்போது வரவேற்பை பெற்றிருக்கிறது.
கலப்பு திருமணத் தம்பதிகளுக்காக கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்களை ஏற்படுத்த சமூக நீதித் துறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, கேரளாவின் சமூக நீதித் துறை அமைச்சர் ஷைலஜா “கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்” எனத் தெரிவித்து இருக்கிறார்.
கேரளாவில் கலப்பு திருமணம் செய்வோருக்கு சமூக நீதித்துறை பல நிதியுதவிகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. பொதுப் பிரிவினராக இருந்து வருமானம் ரூ. 1 லட்சத்தை தாண்டாமல் இருக்கும்போது அம்மாநிலத்தில் சுயவேலை வாய்ப்புக்கான நிதியுதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கப் பட்டு வருகிறது. கலப்புத் திருமணத்தில் ஒருவர் தாழ்த்தப் பட்டவராக இருக்கும் பட்சத்தில் ரூ. 75 ஆயிரம் நிதியுதவி வழங்கப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.