தஞ்சை கோவிலில் முதன் முறையாக தமிழில் அர்ச்சனை.....!
- IndiaGlitz, [Friday,August 06 2021]
தஞ்சை பெருவுடையார் கோவிலில் இன்று முதன்முதலாக முறைப்படி தமிழில் அர்ச்சனை நடைபெற்றது. இம்முறைக்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் இனி வரும் காலங்களில் முறைப்படி, தமிழில் தான் அர்ச்சனை நடக்கும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அந்த செய்தியை உறுதிப்படுத்தும் நோக்கில், முதல்கட்டமாக இன்று தமிழகத்தில் இருக்கும் 47 ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தஞ்சையில் உள்ள பெரிய கோவிலும் இத்திட்டம் துவங்கப்பட்டு, அங்கு முதன்முதலாக பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கடவுளை தரிசித்து சென்றனர்.
கடந்த பல வருடங்களாக மாபெரும் மன்னனான ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில், தமிழ்முறைப்படிதான் குடமுழுக்குவிழா நடைபெற வேண்டும் என்று பல போராட்டங்கள் நடைபெற்றது. கோவில் கருவறையிலும் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடி வந்தனர். இதற்கு பலன் கிட்டும் வகையில் இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. இதை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்று வருகிறார்கள்.