ரஜினி, கமல், விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. அரவிந்த்சாமியின் பழைய வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Sunday,February 04 2024]

ரஜினி, கமல், விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி கூறிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி அதற்கான தேதியும் அறிவித்து அதன் பின்னர் திடீரென தனது உடல்நிலையை காரணம் காட்டி பின்வாங்கினார். உலக நாயகன் கமலஹாசன் அரசியலுக்கு வந்த புதிதில் ஆவேசமாக ஆளுங்கட்சிகளை எதிர்த்தாலும் தற்போது அவரும் திராவிட கட்சிகளுடன் பத்தோடு பதினொன்றாக இணைந்து விட்டார். இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவரது செயல்பாடு எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் அரவிந்த்சாமி அரசியல் குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியபோது, ‘ரஜினி ரசிகர், கமல் ரசிகர், விஜய் ரசிகர் என்பதற்காக நான் வாக்களிக்க மாட்டேன், நடிகர்கள் சொல்லக்கூடிய விஷயங்களால் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுமா? அவர்களால் அந்த மாற்றத்தை செய்ய முடியுமா? மக்களிடம் அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை தெரிந்துதான் நான் வாக்களிப்பேன் என்று தெரிவித்தார்.

ரஜினி, கமல், விஜய் ஆகியோர் பெரிய நடிகர்கள்தான், நான் இல்லை என்று சொல்லவில்லை. அவர்களுக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனாலும் அரசு திட்டங்களை தீட்டும் அளவிற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை நான் எப்படி நம்புவது? ஒரு மாநிலத்தை ஆளும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? ஒரு மாநிலத்தை ஆளும் அளவுக்கு அவர்கள் உயர்ந்திருக்கிறார்களா? அவர்களால் செய்ய முடியாது என்று நான் சொல்லவில்லை, ஆனால் செய்ய முடியுமா என்பதை அவர்கள் தான் எனக்கு விளக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சில வருடங்களுக்கு முன் அரவிந்த்சாமி கூறிய இந்த கருத்து இப்போதும் கூட பொருத்தமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.