இயக்குனர் ஆகிறார் சித்தார்த் அபிமன்யூ

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]
மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் அறிமுகமாகிய நடிகர் அரவிந்தசாமி சமீபத்தில் வெளிவந்த ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தில் சித்தார்த் அபிமன்யூ என்ற வித்தியாசமான வில்லன் கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவியுடன் 'போகன்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் முனிவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ராம்சரண் தேஜா நடிக்கும் 'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கிலும் அரவிந்தசாமி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரவிந்தசாமி விரைவில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இரண்டு கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், இன்னும் ஒரு வருடத்திற்குள் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய அரவிந்தசாமி தான் இயக்கும் படம் தமிழ் அல்லது இந்தியில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய ஆடியன்ஸ்களின் ரசிப்புத்தன்மை மாறியுள்ளதாகவும், ஆனாலும் தான் ஒரு சாதாரண படத்தை இயக்கவிரும்பவில்லை என்றும் தனது படம் வித்தியாசமான திரைக்கதையை கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.