'அரண்மனை, அரண்மனை 2 படங்களுக்கும் 'அரண்மனை 3' படத்திற்கும் என்ன வித்தியாசம்: சுந்தர் சி

  • IndiaGlitz, [Tuesday,October 12 2021]

சுந்தர்சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்களுக்கும் ‘அரண்மனை 3’ படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்கள் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க செட் போட்டு எடுத்துள்ளதாகவும் ஆனால் ‘அரண்மனை 3’ படத்தை நிஜ அரண்மனையில் படமாக்க முடிவு செய்து நாங்கள் நினைத்தபடி அரண்மனையை இந்தியா முழுவதும் தேடி அலைந்து, அதன் பின்னர் திருப்தியாக ஒரு அரண்மனை கிடைத்த பின்னர் அந்த அரண்மனையில் 40 நாட்கள் படமாக்கினோம் என்றும் எனவே படம் மிகவும் பிரமாண்டமாக வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிஜி பணிகள் இந்த படத்திற்காக மிக அதிகமாக செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுவரை தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு சிஜி பணிகள் பிரமாண்டமாக இருக்காது என்ற அளவில் செய்திருக்கின்றோம் என்றும், அதனால் படம் பார்ப்பவர்களுக்கு பிரம்மாண்டம் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்து மனக் கவலையை மறக்கச் செய்வது தான் தன்னுடைய பணி என்றும், என்னுடைய படத்தில் பெரிய அளவில் கருத்துக்கள் புரட்சிகள் ஆகியவை இருக்காது என்றும் என்னுடைய ஒரே நோக்கம் பார்வையாளர்களை மகிழ்ச்சியோடு அனுப்ப வேண்டும் என்பதுதான் என்றும் சுந்தர்சி தெரிவித்துள்ளார்.