உலகக்கோப்பை ஹாக்கி தொடக்க விழாவில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்
- IndiaGlitz, [Wednesday,November 28 2018]
உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி இன்று முதல் தொடங்குகிறது. ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ளவுள்ளன. இந்திய ஹாக்கி அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டியின் தொடக்க விழா நேற்றிரவு ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்றார்.
தொடக்க விழாவின் முதல் நிகழ்ச்சியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ஹாக்கி விளையாட்டு குறித்து உருக்கமாக பேசினார். அதனைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் நடன நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. ரோஜா, பம்பாய் படப்பாடல்களை பாடி அசத்திய ரஹ்மான், இறுதியில் உலகக்கோப்பை ஹாக்கித்தொடருக்காக இசையமைத்த தீம் பாடலை பாடினார். ஜெய் ஹிந்த் ஹிந்த், ஜெய் இந்தியா என்று தொடங்கும் இந்த பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளிவந்தது என்பதும் இந்த பாடலில் ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டி ஒன்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதவுள்ளது.