ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த இசை சொர்க்கம்: ஆச்சரியமான தகவல்கள்!
- IndiaGlitz, [Tuesday,March 08 2022]
துபாயில் தற்போது எக்ஸ்போ 2020 நடைபெற்று வரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகத்தரத்தில் ஒரு இசை ஸ்டூடியோ ஒன்றை அமைத்து உள்ளார் என்பதும் அந்த ஸ்டூடியோவில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா உள்பட பல இசை பிரமுகர்கள் வருகை தந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் Firdaus ஸ்டுடியோ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இசை ஸ்டுடியோ குறித்த தகவல் ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த இசை ஸ்டுடியோவில் முழுக்க முழுக்க பெண் இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்ந்த ஆடிசன் மூலம் தேர்வு செய்யப்பட்ட இந்த பெண்கள் அனைவரும் 23 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் என்றும், குறிப்பாக பெண்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட்ட நாடுகளில் இருந்து அழைத்து வந்தவர்கள் என்பதும் ஆச்சரியமான ஒரு தகவல் ஆகும்.
மேலும் பெரும்பாலும் அரேபிய இசையை மூலதனமாகக் கொண்ட தொன்மை இசை வடிவங்களையும் இசைக் கருவிகளையும் முதன்மைப்படுத்தி இந்த ஸ்டூடியோவில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இசை ஸ்டூடியோவுக்கு ஏற்கனவே பி சுசிலா, ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பாக இளையராஜா இந்த இசை ஸ்டூடியோவுக்கு வருகை தந்ததோடு, அந்த ஸ்டுடியோவுக்கு என பிரத்யேக இசைக்கோர்வையை கம்போஸ் செய்து தருவதாக இளையராஜா உறுதி அளித்துள்ளதால் அந்த இசைக்கோர்வை அனைவரின் காதுகளையும் குளிர வைக்கும் என்பதும் உறுதி.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஸ்டுடியோவுக்கு Firdaus என்ற பேரை வைத்து உள்ளார். Firdaus என்ற அரபிச் சொல்லுக்கு சொர்க்கம் என்பது பொருள். உண்மையாகவே இசைப்புயலின் இசை சொர்க்கம் தான் இந்த ஸ்டூடியோ என்று இதனை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.