close
Choose your channels

கால் நூற்றாண்டு இசை சரித்திரம்

Saturday, April 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

"ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்"

வைரமுத்து எழுத்தில், ரஹ்மான் குரலில், மணிரத்னம் பார்வையில் ஒலிக்கும் வரிகள் இவை. இதற்கான விடை இந்த கட்டுரையின் இறுதியில் இருக்கிறது.

"ரோஜா முதல் காற்று வெளியிடை வரை"

இந்த 2017 தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு மணிரத்னத்தின் இருபத்தைந்தாவது திரைப்படமான 'காற்று வெளியிடை' வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டுடன் AR ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் கழிகின்றன. மணிரத்னமும் ரஹ்மானும் இணைந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. மணிரத்னம்-ரஹ்மான்-வைரமுத்து கூட்டணியும் வெள்ளிவிழா காண்கிறது. இதில் எதைப்பற்றி சிலாகித்து எழுதினாலும் இறுதியில் இந்த மூவருக்குள் தான் எழுதியாக வேண்டும்.

"இந்த படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் மட்டும் ஆயுத எழுத்தின் மூன்று புள்ளிகள் அல்ல. நான், மணிரத்னம், AR ரஹ்மான் நங்கள் மூவரும் கூட இந்த ஆயுத எழுத்தின் புள்ளிகள் தான்" - 2004ம் ஆண்டு 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியது இது. அன்று வைரமுத்து உதிர்த்த வார்த்தைகளின் ஈரம் பதின்மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த ஈரத்தின் வித்துக்கு நீரின் முதல் துளியை 'ரோஜா' படம் மூலம் ஊற்றி இசையின் வசந்தகாலக் கதவுகளைப் திறந்துவைத்த பெருமை இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தரையே சாரும். மணிரத்னம் என்னும் கடலிடம் இணைந்த ஜீவநதி வைரமுத்து என்றால் கடலுக்குள் ஊற்றெடுத்த இன்னிசையூற்று AR ரஹ்மான்.

ஒரு மேடையில் கலைஞரை வாழ்த்திப்பேசும்போது "நண்பா. உன்னை வாழ்த்திப்பேசினால் அது என்னையும் வாழ்த்துவது போல தானே ஆகும். என்னை விடுத்து உன்னை மட்டும் எப்படி வாழ்த்துவது" என்று சிவாஜி கணேசன் பேசியிருப்பார். அப்படி இந்த இருபத்தைந்து ஆண்டு பயணத்தை மணிரத்னம்-AR ரஹ்மான் என்று எழுதினாலும் பெயர்களுக்கிடையில் உள்ள இடைவெளியைப்போல வைரமுத்துவும் இவர்களோடு இணைந்து தான் தெரிவார். ஒரு இசை வெளியீட்டு விழா மேடையில் ரஹ்மானும் மணிரத்னமும் நின்றிருக்க வைரமுத்து கீழே அமர்ந்திருப்பார். புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர் இருவரையும் இணைந்து நிற்கச்சொல்லிக் கேட்க, மணிரத்னம் 'வைரமுத்து சார் மேல வாங்க' என்று வைரமுத்துவை அழைப்பார். உடனே அருகிலிருக்கும் ரஹ்மான் "ஆமா. தமிழ் இல்லாம எப்படி" என்று அவர்களுக்குள் இருக்கும் வைரமுத்துவின் இருப்பை உறுதி செய்வார். இந்த மூவரும் இணைந்து பயணித்துக்கொண்டிருக்கும் கால்நூற்றாண்டு கால தமிழ் சினிமா தமிழிசைத்தட்டில் தாங்கவேண்டிய பொற்காலம்.

மணிரத்னமும் ரஹ்மானும் வைரமுத்துவும்

ஹாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 1974ஆம் ஆண்டு முதல் கடந்த 43 ஆண்டுகளாக இசையமைப்பாளர் ஜான் வில்லியாம்ஸோடு பணியாற்றிவருகிறார். நமது தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா-இளையராஜா கூட்டணி கூட முப்பது ஆண்டுகள் தாண்டியும் பாலு மகேந்திராவின் மரணம் வரை நீடித்தது. சமகால சினிமா இசைக்கு நம்மிடம் இருக்கும் ஆர்ச்சர்யம் மணிரத்னம்-ரஹ்மான் மட்டும் தான்.

இன்றைய தலைமுறையினருக்கு தனிமையை மீட்டெடுக்க, மகிழ்ச்சியின் உச்சத்தில் குதூகலிக்க, இடைப்பட்ட பிரிவில் அழுதுத் தீர்க்க, முதல் காதலில் தமிழை ரசிக்க, நனையாமல் கூட மழையை உணர இசைக்கப்பட்டுக் கொண்டிருப்பதெல்லாம் இவர்களது பாடல்கள் தான்.

MS.விஸ்வநாதனுடன் தொடர்ந்து பணியாற்றி வந்த ஸ்ரீதர் இளையராஜா இசையின் புதுமையைக்கண்டு தனது 'இளமை ஊஞ்சலாடுகிறது' திரைப்படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக பயன்படுத்தத் தொடங்கினார். இதே நிகழ்வு தான் ரஹ்மானுக்கும் 'ரோஜா' படத்தில் நடந்தேறியது. அதுவரை தமிழகத்தில் யாரும் கேட்டிராத ஒரு புதிய இசையை கார் ஷெட்-க்குள் உருவாக்கிக்கொண்டிருந்த ரஹ்மானை மணிரத்னம் முதன்முறையாக பயன்படுத்தியதும் 'தளபதி' வரை இருந்த மணிரத்னம் -இளையராஜா கூட்டணி மணிரத்னம்-ரஹ்மானாக மாறியது.

மௌன ராகம், தளபதி, நாயகன் என்று தமிழ் சினிமாவின் அத்தனை இலக்கணங்களையும் உடைத்தெறிந்த இசையை இந்த இளைஞன் எப்படி 'ரோஜா' படத்தில் சாத்தியப்படுத்தி விட முடியும் என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் பரவலாக அனைத்து இசை ரசிகர்களிடமும் இருந்தது. ஆனால் 'ரோஜா' என்ற ஒரு இசைக்களஞ்சியம் அத்தனை கேள்விகளையும் உடைத்து செய்தவொரு அதிர்வை இன்று வரை எந்த படமும் செய்யவில்லை. அந்த சாத்தியத்தின் காரணம் ரஹ்மான் மேலிருந்த மணிரத்னத்தின் நம்பிக்கை. நம்பிக்கையை விட பெரிய ஆதரவு இந்த உலகத்தில் வேறெதுவும் இருந்துவிட முடியாது.


ஸ்ரீதர் கூட இளையராஜாவை விடுத்து மீண்டும் MS.விஸ்வநாதன், புதியதாக SP. பாலசுப்ரமணியம் என்று இணைந்து வேலை செய்யத்தொடங்கினார். ஆனால் மணிரத்னம் இன்று வரை இந்த ரஹ்மானைத்தவிர வேறு எந்த இசையமைப்பாளரையும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இருவருக்குமான இந்த பந்தம் நட்பு என்பதைத்தாண்டி ஒரு புரிதலுள்ள தேடல் என்ற திசையில் நகர்கிறது. உழைப்பு, புதுமை, இளமை என்று செல்லும் தூரங்களில் இவர்கள் தங்கள் தேடலை செலுத்துகிறார்கள். ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மதிப்பு, நேசம் அவர்களுக்கான உந்துசக்தியாக இருக்கிறது.

Though I work with Rahman again and again, it is not because it is comfortable. In fact, we push ourselves to a discomfort zone, which we have not tried before. Over the years, trust increases. I believe in him a lot more today so that we can boldly get into newer sounds and newer areas. - AR ரஹ்மான் குறித்த ஒரு கேள்விக்கு மணிரத்னத்தின் பதில் இது. இது அத்தனை உண்மை. இருவரும் தங்களை எந்தவொரு மிதமான சூழ்நிலைக்குள்ளும் பொருத்திக்கொள்வதில்லை. 'கடல்' இசைவெளியீட்டு விழாவில் ரஹ்மானிடம் "நீங்களும் மணி சாரும் 20 வருஷமா ஒன்னா இருக்கீங்க" என்று அர்ஜுன் கேட்டு முடிப்பதற்குள் "கண் த்ருஷ்டி போடாதீங்க" என்று ரஹ்மான் சிரித்துக்கொண்டே பதிலளிப்பார். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் கூட மணிரத்னத்திடம் 'நீங்க ஏன் வேறொரு இசையமைப்பாளருடன் பணியாற்ற முயலவில்லை' என்று ஒரு நெறியாளர் கேட்க 'இப்படி எல்லாம் அவருக்கு சொல்லிக்கொடுக்காதீங்க' என்று விட்டுத்தராமல் உரிமையோடு பதில் கொடுப்பார் ரஹ்மான்.

தனது பட அறிவிப்பை ரஹ்மான் தான் இசையென்று ரஹ்மானின் ஒப்புதல் கூட இல்லாமல் ஒரு இயக்குனர் வெளியிட முடியுமென்றால் இன்றும் என்றும் அது நிச்சயம் மணிரத்னம் மட்டும்தான். இதுதான் இவர்கள் இருவருக்கும் உண்டான பிணைப்பு. ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் தங்கள் பணிகளைச்செய்வதால் தான் இவர்களிடமிருந்து வரும் படைப்புகளில் உண்மையும் நேர்மையும் நிறைந்திருக்கிறது.

ஒரு விழாவில் மணிரத்னம் ரஹ்மானிடம் தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நன்றி சொன்னதும் 'நான் தான் நன்றி சொல்லணும். நீங்க என் குரு' என்று ரஹ்மான் தனது நன்றியைத் தெரிவித்திருப்பார். ரஹ்மான் பெற்றிருக்கும் இத்தனை பெரிய இமாலய வளர்ச்சியை ரஹ்மானின் தாயைத்தவிர ஒருவர் பெருமைப்பட்டுக்கொள்ள முடியெமென்றால் அது மணிரத்னமாகத் தான் இருக்க முடியும். ரஹ்மான் அமர்ந்திருக்க மணிரத்னம் அவர் பின்னாடி நின்று தோளில் கைபோட்டு சிரித்துக்கொண்டிருப்பது போல ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தைப் அனைவரும் பார்த்திருப்போம். சமீபத்தில் விகடனில் வெளியாகியிருந்த ஒரு புகைப்படத்தில் மணிரத்னம் அமர்ந்திருக்க அவர் இருக்கையில் ரஹ்மான் சாய்ந்து அமர்ந்திருப்பதுபோல படம்பிடித்திருந்தார்கள். இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஒரு தந்தை-மகன் உறவின் சாயல் தெரியும். Facebookல் லைவ் செய்யப்பட்ட 'காற்று வெளியிடை' ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஹ்மானை 'சின்னச் சின்ன ஆசை'யை இசைத்துக்காட்டச் சொல்லிக் கேட்பார் மணிரத்னம். ரஹ்மான் வாசித்து முடித்ததும் எத்தனையோ முறை அந்த விரல்களில் வாசித்துக் கேட்டிருந்தாலும் "still magicalல இது" என்று மணிரத்னம் மகிழும்போது அவரது கண்களில் ஒரு கர்வம் தெரியும்.

ஒரு படத்துக்கு இசை எவ்வளவு முக்கியம் என்பதை தீர்க்கமாக நம்புபவர் மணிரத்னம். இசையென்றால் வெறும் பாடல்கள் மட்டுமல்ல அதுவொரு ஒலிநிறைந்த ஜீவனும்கூட என்று உணர்ந்ததாலேயே உணர்ச்சிகராமான விடயங்களைச் சொல்லும் படங்களில் காதலை மனித உறவுகளை வருடுவது போல சொல்ல முடிகிறது. மணிரத்னம் தனது படங்களில் ஒரு சமுதாய பிரதிபலிப்பினை திரையின் பிம்பத்தில் காட்சிப்படுத்த அதனுள் காதலை அழுத்தமாக பதிய வைக்கிறார். அந்த பதிவுகளுக்கு பக்கபலமாக இசையும் மொழியும் தேவைப்படுகிறது. மணிரத்னமும் ரஹ்மானும் கதையின் இயல்பை விட திரைக்கதையின் சூழலுக்கு ஏற்ப இசையை வடிவமைக்கிறார்கள். படம் கூற விளையும் செய்தியையும், அது இயங்கும் தளத்தையும் பொறுத்தே பாடல்களின் நிறத்தை தேர்வு செய்கிறார்கள். என்ன தான் காஷ்மீர் அரசியல், வடகிழக்கு போராளிகளின் பதிப்பு, தமிழகத்தின் திராவிட அரசியல், ஈழம் என்று உணர்ச்சிகரமாக விமர்சனத்துக்குள்ளாகும் படமாக இருந்தாலும் அதிலுள்ள மூலக்கதை அன்பின் அடர்த்தியில் தான் பின்னப்பட்டிருக்கிறது. 'காதல் ரோஜாவே' என்று பிரிவின் ஆற்றாமையைச் சொன்னவர்கள் தான் "மதமென்னும் மதம் ஓயட்டும்" என்று மனிதநேயத்தைச் சொன்னார்கள். இசை வாத்தியங்கள் இல்லாமல் வெறும் குரல்களை மட்டும் வைத்து "ராசாத்தி" என்று பாடிய இவர்களே பிரம்மாண்ட இசைக்கோர்ப்பில் "வீரபாண்டி கோட்டையிலே" என்று கொடி நாட்டினார்கள்.

தேவையான இடங்களில் அதன் இயல்பில் இசையை ஒலிக்கச் செய்வது ரஹ்மானின் இயல்பு. அது அதிகம் ஆர்ச்சர்யப்படுத்துவது மணிரத்னம் படங்களில் தான். 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் சிறந்த பாடல் எதுவென்று கேட்டால் "விடை கொடு எங்கள் நாடே" என்று பலரும் சிலாகிக்கக்கூடும். தமிழ் சினிமாவின் ஜீவனுள்ள பாடல்களில் இந்த பாடல் முன்னிருக்கையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. கவனிக்கப்படாத குழந்தையின் சிரிப்பு கொஞ்சம் பொக்கிஷம் போன்றது. மீண்டும் மீண்டும் ஏங்கவைக்கும் சிரிப்பு அது. அது போல இந்த படத்தில் கவனிக்கப்படாத பாடல் என்றால் அது "சட்டென நனைந்தது நெஞ்சம்" . காட்சிப்பின்னணியில் வரும் இந்த பாடல் இயக்குனரும் இசையமைப்பாளரும் கவிஞரும் ஒரு காட்சியை எப்படி கையாளுகிறார்கள் என்று சொல்வதற்கு ஆகச்சிறந்த பைபிளாக இருக்க முடியும். "கல்யாணத்துக்கு எனக்குன்னு சில conditions இருக்கு' என இந்திரா சொல்லி முடிப்பதற்குள் சட்டென திருச்செல்வம் அணைத்துக்கொள்ள அங்கு மின்மினியின் குரலில் 'சட்டென நனைந்தது நெஞ்சம்" என்று மழைக்குப்பிந்தைய சாரலோசையில் ஒலிக்கத் தொடங்கும்.

அது காட்சியமைப்புக்கான இசை. தேவைக்கான பாடல். தேவைக்கேற்ப உப்பு என்று எல்லா சமையல் நிகழ்ச்சிகளிலும் வரும் அறிவுரை போல இந்த தேவைக்கேற்ப இசையில் ரஹ்மானும் மணிரத்னமும் முத்திரை பதித்தவர்கள். ஒரு காட்சியின் பின்னணியில் இசையை எப்படிச்சொல்ல வேண்டும், அந்த இசை எதைச்சொல்ல வேண்டும் என்பதை மணிரத்னம் வெகு அழகாக திரையில் பதிப்பவர். 'பம்பாய்' திரைப்படத்தின் வரும் காட்சி இது. அரவிந்த்சாமியிடம் சேர்வதற்காக கையில் ஒரேயொரு பெட்டியோடு மனம் முழுக்க ஆசை, பயம், எதிர்பார்ப்போடு பம்பாய் ரயில்நிலைத்தில் வறண்டகாட்டில் புல்வெளி தேடும் மான் போல மனிஷா கொய்ராலா காத்திருப்பார். கண்களில் ஏக்கத்தோடு காத்திருக்கும்போது பின்னனியில் "உயிரே" பாடலின் இசை புல்லாங்குழலின் ஓசையில் ஒலித்துக்கொண்டிருக்கும். அது அங்கு சொல்லப்பட்ட இசை. "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு" என்ற வைரமுத்து வரிகள் அந்த இசையில் சொல்லப்பட்ட செய்தி. இந்த காத்திருப்பை ஆனந்தத்தோடு பின்னால் இருக்கும் தூணில் சாய்ந்துகொண்டு ரசிக்கும் அரவிந்த் சாமி மனிஷா கொய்ராலாவிடம் அமைதியாக நெருங்கிச்சென்று "போய் கல்யாணம் கட்டிக்கலாமா" என்று கேட்டதும் இசைக்கத்தொடங்கும் தபேலா அந்த காட்சியின் இறுக்கத்தை மடைதிறந்த வாய்க்கால்நீர் போல இலகுவாய் விலக்கி விடும்.

இவர்களின் 'ரோஜா' படம் டைம்ஸ் பத்திரிக்கையின் "10 Best Soundtracks" என்ற பிரிவில் சிறந்த பாடல்களின் ஆல்பமாக இடம்பிடித்திருக்கிறது. 'பம்பாய்` படத்தின் பாடல்கள் 'கார்டியன்' பத்திரிக்கையின் "1000 Albums To Hear Before You Die' என்ற பிரிவில் ஆயுட்காலம் முடிவதற்குள் கேட்டுவிட வேண்டும் என்று நினைக்கக்கூடிய பாடல்களாக வைக்கப்பட்டிருக்கிறது. ரஹ்மான் தான் வாங்கிய நான்கு தேசிய விருதுகளில் இரண்டு மணிரத்னம் திரைப்படங்களுக்காக வாங்கியிருக்கிறார். அதுபோல வைரமுத்துவின் ஆறு தேசிய விருதுகளில் இரண்டு மணிரத்னம் படங்களில் கிடைத்தவை. ஆனால் இவர்களிடம் கேட்டால் இந்த விருதுகளைக் கொஞ்சம் கூட பெரிதாக எண்ண மாட்டார்கள். அப்படி எண்ணியிருந்தால் 'ரோஜா' படத்திலேயே அந்த வெற்றியை சுவைத்து விட்ட அவர்களுக்கு ஒரு பாம்பாயோ, ஒரு கன்னத்தில் முத்தமிட்டாலோ தேவைப்பட்டிருக்காது. மணிரத்னமும் ரஹ்மானும் தங்களின் படங்களுக்கு எதையுமே அளவுகோலாக வைத்துக்கொள்வதில்லை. எந்தவொரு எல்லையும் வகுத்துக்கொள்ளாமல் அவர்களது திருப்திக்கு ஏற்றவாறு இசையை கதையில் சேர்க்கிறார்கள். அதில் வைரமுத்து தனது வார்த்தைகளை கோர்க்கிறார்.

தங்களை நிலைநிறுத்திக்கொள்ள எந்தவொரு முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை. அது இவர்களுக்கு தானாகவே வசப்பட்டிருக்கிறது. இந்த இசைவசத்தில் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் பெரும்பாலான இசை வெற்றிகளை தங்களது உள்ளங்கைகளில் தாங்கி நிற்கிறார்கள்.

'நான் மணிரத்னத்தோடு சேர்ந்த பிறகு தான் என் பாடல்களில் கவிதை கூடியது' என்று வைரமுத்து ஒருமுறை சிலாகித்திருந்தார். இவரின் எழுத்துகளுக்கு முதல் ரசிகர்கள் மணிரத்னமும் ரஹ்மானும் தான். வைரமுத்துவின் பேணா படித்து முடித்ததும் இவர்கள் தான் முதலில் படிக்கிறார்கள். இவர்கள் மூவருமே ஒருவருக்கொருவர் ரசித்துக்கொள்கிறார்கள். ஒரே அலைவரிசையில் தமிழை ரசிக்கிறார்கள். வைரமுத்துவின் கவிவரிகளை ரஹ்மான் இசைக்குறிப்புகளோடு மெருகேற்றி மணிரத்னத்தின் கதாபாத்திரங்களுக்கு உணர்வளித்துவிடுகிறார்.

எப்படி இவ்வளவு இளமையாக சிந்திக்கிறீர்கள் என்று மணிரத்னத்திடம் கேட்டால் பவ்யமாக ரஹ்மானையும் வைரமுத்துவையும் கைக்காட்டி இவர்களைப்பார்த்து தான் என்று சிரித்துக்கொள்வார். முழுவதும் இளமையும் புதுமையாக வந்த 'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மெண்டல் மனதில்' பாடலை ரஹ்மான் மணிரத்னம் இணைத்து எழுதியிருந்தார்கள். அதில் வரும் ஒரு வரி "நேற்று என்பது இன்று இல்லை". ஆம் இவர்களுக்கு நேற்று என்பதே இல்லை. சிந்தனை முழுவதும் நாளையைப்பற்றியது தான். அதனால் தான் ஒவ்வொரு படத்தையும் அவர்களது முதல் படமாக நினைத்து உருகி உருகி உருவாக்குகிறார்கள். இன்னும் உருவாக்குவார்கள். "Just a Magic" என்று சொல்லும் இவர்களின் மாயங்களுக்கும் ரகசியங்களுக்கும் தேவைப்படுவதெல்லாம் நீளம் குறைந்த ஒரு ரயில், காலங்கள் மறந்த நேரத்து மழை, கொஞ்சம் அலையுடன்கூடிய கடல், கூந்தல் விரிந்த ஒற்றைத்தலையணை, இருமுகம் தெரியும் உயிர்க் கண்ணாடி, வாய்பேசும் நிறங்கள், இருளில் ஒலிந்திருக்கும் வெளிச்சம், சொல்ல சொல்ல கேட்க கேட்க பார்க்க பார்க்க பேச பேச பரிணமிக்கும் காதல்.இதனூடே தமிழும், இசையும்.

இப்படி உருவாகும் படைப்புகளின் உணர்வுகள் தான் இவர்களின் கனா. இருபத்தைந்து ஆண்டுகளாக நெஞ்சில் வைத்திருக்கிறார்கள். வெளிப்படும் உணர்வுகளின் தொடர்ச்சிக்காக இன்னும் உழைக்கிறார்கள்.

"சொந்த ஆகாயம் வேண்டும் - ஜோடி நிலவொன்று வேண்டும்" என்று கேட்ட வைரமுத்துவின் சொந்த ஆகாயத்தின் ஜோடி நிலவாக மணிரத்னமும் ரஹ்மானும் மிளிர்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களது படைப்புகளுக்கு இவர்கள் மொழியிலேயே பதில் சொல்ல வேண்டுமானால் இப்படி சொல்லலாம்.

"மலர்கள் கேட்டோம்
வனமே தந்தனை"

- இளம்பரிதிகல்யாணகுமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment