ஏ.ஆர்.ரஹ்மானின் 'நேற்று இன்று நாளை': லண்டனில் சிறப்பு நிகழ்ச்சி
- IndiaGlitz, [Monday,June 19 2017]
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த ஆண்டுடன் அவரது இசைச்சேவைக்கு 25வருடம் நிறைவு பெற்றுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் தனது 25 வருட இசைப்பயணத்தையொட்டி லண்டனில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். 'நேற்று இன்று நாளை' (Yesterday Today Tomorrow) என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சி வரும் ஜூலை 8ஆம் தேதி லண்டனில் மிகவும் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது: கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப்பயணம் உண்மையிலேயே மறக்கமுடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப்பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான். என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம்தருகிறது. ரோஜா' முதல் காற்று வெளியிடை' படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஏ.அர்.ரஹ்மானுடன் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.