ஆஸ்கார் விருது தொலைந்துவிட்டதா? ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பகீர் தகவல்!
- IndiaGlitz, [Sunday,April 11 2021]
சமீபத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது ஆஸ்கார் விருதுகள் தொலைந்து விட்டதாகவும் அதன்பின்னர் உடனடியாக கிடைத்து விட்டதாகவும் பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்தில் ஒரிஜினல் ஸ்கோர் செய்ததற்காக ஒரு விருதும் அதே படத்தில் இடம்பெற்ற ’ஜெய்ஹோ’ என்ற பாடலுக்காக இன்னொரு ஆஸ்கார் விருதும் கிடைத்தது.
இந்த ஆஸ்கார் விருதுகள் அவருடைய தாயாரின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த விருதை தன்னுடைய தாயார் தங்கம் என நினைத்து ஒரு துணியில் சுற்றி அலமாரியில் பாதுகாப்பாக வைத்து இருந்ததாகவும் அவர் பேட்டியில் கூறினார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் காலமானார். இதனையடுத்து ஆஸ்கார் விருதுகளை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்ததாகவும், அப்போது அவரது தாயார் வீட்டில் விருதுகளை தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஒருவேளை விருதுகள் தொலைந்துவிட்டதோ என நினைத்த நேரத்தில் தான் அவரது மகன் இன்னொரு அலமாரியில் அந்த விருதுகள் இருந்ததை கண்டு பிடித்ததாகவும் இந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.