'பாகுபலி 2' வெற்றியை ரஜினி மிஸ் செய்தது எப்படி? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
- IndiaGlitz, [Monday,May 22 2017]
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்பட பலர் நடித்த எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் தென்னிந்திய சினிமாவை உலக அரங்கில் தலைநிமிர செய்துள்ளது. ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்துவரும் இந்த படத்தின் வெற்றியை ஹாலிவுட் திரையுலகினர்களே ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், 'பாகுபலி 2' படத்திற்கு முன்பே ஒருசில இயக்குனர்கள் பிரமாண்டத்தை முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் செளந்தர்யா இயக்கிய 'கோச்சடையான்' திரைப்படம் 'பாகுபலி 2' அளவிற்கு வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு படம். ஆனால் அந்த படத்தின் அனிமேஷன் மற்றும் சிஜி பணிகள் சரியாக செய்யாததால் உலக அரங்கில் அது வெற்றி பெறவில்லை. இதேபோல் பாலிவுட்டில் சேகர்கபூர் செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இவர்களுடைய எண்ணம் சரியாக இருந்தாலும் அவர்களுடைய வழி சரியில்லாததால் தோல்வி கிடைத்தது. ஆனால் பாகுபலி படக்குழுவினர் அந்த தவறை செய்யாமல் சரியான வகையில் திறமையை வெளிப்படுத்தியதால் இந்த மாபெரும் வெற்றி கிடைத்தது' என்று பாராட்டியுள்ளார்.
மேலும் இதுவரை தான் கேட்ட கதைகளில் 'சங்கமித்ரா' போன்று எந்த படத்தின் கதையும் தன்னை கவரவில்லை என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். 'பாகுபலி'க்கு இணையான அல்லது அதைவிட ஒரு படி மேல் மிகப்பெரிய வெற்றியை 'சங்கமித்ரா' பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.