இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிட்டிஷ் அகாடமி ஒன்று வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு உள்ளது. அந்தத் திட்டத்திற்கு நமது இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் இந்த பணி தனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி கலைகளுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது பிரிட்டிஷ் அகாடமி (பாஃப்தா). இந்த அமைப்பு இந்தியாவில் ப்ரேக்த்ரூ (இளம் திறமையாளர்களை தேர்வு செய்வது) எனும் பெயரில் ஒரு புதிய செயல் திட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் திரைப்படங்கள், விளையாட்டு அல்லது தொலைக்காட்சியில் செயல்படும் இளம் 5 திறமையாளர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்க உள்ளது.
இப்படி தேர்ந்தெடுக்கப்படும் இளம் திறமையாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தேவையான துறை ஆலோசனைகள், சர்வதேச அளவில் தொடர்புகள், பாஃப்தா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, திரையிடல்களுக்கு இலவச அனுமதி போன்ற பல்வேறு வசதிகளை பாஃப்தா அமைப்பு செய்து கொடுக்க இருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸ் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய முயற்சிக்கு இந்தியாவின் சார்பாக நமது இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர், “நம்பிக்கை தரும் கலைஞர்களை உலகப் புகழ் பெற்ற ஒரு அமைப்பு ஆதரவு தரும் தனித்துவமான வாய்ப்பு இது. இதன் மூலம் உலகின் மற்ற இடங்களில் இருக்கும் திறமையாளர்களின் தொடர்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பாஃப்தா விருதுகளில் வென்றவர்கள் மற்றும் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும். இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டப்படும் அந்த அற்புதத் திறமைகளை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments