ஒரே வருடத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்கினாரா ஏஆர் முருகதாஸ்.. ஆச்சரிய தகவல்..!
- IndiaGlitz, [Thursday,September 19 2024]
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த 'தீனா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் முருகதாஸ். அதன் பின்னர் சூர்யா நடித்த 'கஜினி', விஜய் நடித்த 'துப்பாக்கி', விஜயகாந்த் நடித்த 'ரமணா' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தை இயக்கிய நிலையில், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் திரைப்படங்கள் இயக்காமல் இருந்த ஏ.ஆர். முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 23' மற்றும் சல்மான் கான் நடித்து வரும் 'சிக்கந்தர்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
இதில் 'எஸ்கே 23' படத்திற்கு அவருடைய சம்பளம் 20 கோடி ரூபாய் என்றும், 'சிக்கந்தர்' படத்திற்கு 30 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனால், ஏ.ஆர். முருகதாஸ் மார்க்கெட் இன்னும் உயரும் என்று கூறப்படுகிறது.