மன்னிப்பு கேட்க முடியாது, உத்தரவாதமும் தரமுடியாது: ஏ.ஆர்.முருகதாஸின் தைரியமான முடிவு
- IndiaGlitz, [Wednesday,November 28 2018]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் அரசின் விளம்பர பொருட்களை விமர்சிக்கும் வகையில் காட்சி இருந்ததால் அந்த காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் பெற்ற நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நேற்றைய விசாரணையின்போது, 'ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட மாட்டேன் என்ற உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அரசு தரப்பில் வாதாடப்பட்டது.
இதற்கு இன்று பதிலளித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு, 'அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும், இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் கூறப்பட்டது. மேலும் ஒரு திரைப்படத்தில் காட்சிகள் அமைப்பது தனது சுதந்திரம் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் இந்த தைரியமான முடிவுக்கு நெட்டிசன்கள் தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.