ஏ.ஆர்.முருகதாஸ் கையில் சிக்கிய புலனாய்வுத்துறை
- IndiaGlitz, [Friday,June 02 2017]
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் நேற்று வெளியான இந்த படத்தின் முதல்பார்வை வீடியோவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமெளலி உள்பட தென்னிந்திய பிரபலங்கள் பலர் இந்த முதல் பார்வை வீடியோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தின் கதை ஒரு பயோ பயங்கரவாதம் குறித்தது என்றும், அதுமட்டுமின்றி புலனாய்வு துறையில் உள்ள அதிகாரிகளின் ஊழலை வெட்டவெளிச்சமாக்கும் கதை என்றும் கூறப்படுகிறது. போதி தர்மர், ஸ்லிப்பர் செல் ஆகிய வார்த்தைகள் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் இருந்துதான் நாம் தெரிந்து கொண்டோம். எனவே அவர் ஒரு துறை குறித்த கதையை தேர்வு செய்தால் அதன் ஆழம் வரை செல்பவர் என்பது அவரது முந்தைய படங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அவரிடம் புலனாய்வு துறை சிக்கியுள்ளதால் இத்துறையின் ஊழல்களை இந்த படத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.