'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா? தமிழக அரசியல் காரணமா?
- IndiaGlitz, [Saturday,October 24 2020]
’பிகில்’ திரைப்படத்தை அடுத்து தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் விலகிவிட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏஆர் முருகதாஸ் கூறிய கதை தமிழக அரசியலை மையப்படுத்திய கதை என்றும் இந்த கதையில் தனக்கு சில சந்தேகங்கள் இருந்தால் தயாரிப்பு தரப்பிடம் இந்த கதையை கூறி உறுதிசெய்யவும் என்று ஏஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து தயாரிப்பு தரப்புக்கு ஏஆர் முருகதாஸ் கதையை கூறியபோது தமிழக அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையை தயாரிக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் கதையில் சில மாற்றங்கள் செய்யும்படியும் தயாரிப்பு தரப்பு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் கதையில் மாற்றம் செய்ய தனக்கு விருப்பமில்லை என்று ஏஆர் முருகதாஸ் கூறியதால் இந்த படத்தில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும் இதனை அடுத்து ஏஆர் முருகதாஸ் ‘தளபதி 65’ படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை ’தளபதி 65’ படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் விலகுவது உறுதி செய்யப்பட்டால் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றிமாறன் ஏற்கனவே விஜய்க்கு கதை கூறியிருந்தாலும் அவர் சூரி, சூர்யா படங்களில் தற்போது பிசியாக இருக்கிறார். மகிழ் திருமேனியும் உதயநிதியின் அடுத்த படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லியும் ஷாருக்கானின் அடுத்த பட வேலைகளில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார். எனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை என்ன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.