ஜெயலலிதாவின் 'அந்த 73 நாட்கள்'. அப்பல்லோ ஊழியர்களின் மறக்க முடியாதஅனுபவம்

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

தமிழக முதல்வராக இருந்து கடந்த திங்கள் அன்று மறைந்த செல்வி ஜெயலலிதா, இரண்டு மாதங்களுக்கும் மேல் அதாவது 73 நாட்கள் அப்பலோவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த 73 நாட்களிலும் தங்கள் சொந்த வீட்டை மறந்து முதல்வரின் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் சேர்மன் ஆகியோர் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் சிகிச்சையில் இருந்தபோது மூன்று ஷிப்டுகளில் 16 நர்ஸ்கள் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர். இவர்களில் ஷீலா, ரேணுகா மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய மூவர் மிகவும் முக்கியமானவர்கள்
முதல்வருக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் அவருடைய அறைக்குள் நுழையும்போது எங்களை புன்னகையுடன் வரவேற்பார். அதுவொரு வித்தியாசமான உணர்வு என்று கூறுகிறார் நர்ஸ் ஷீலா
இந்த 70 நாட்கள் அவருடன் இருந்த நாட்களை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று கூறுகிறார் சீனியர் நர்ஸ் ரேணுகா. தனக்கு தேவையான உணவை அவர் எழுதி எங்களுக்கு காண்பிப்பார். பெரும்பாலும் அவருடைய உணவு பொங்கல், உப்புமா, தயிர்சாதம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவையாகத்தான் இருக்கும். அவருக்காகவே ஸ்பெஷல் சமையல் அறை ஏற்பாடு செய்து அவருக்கு தேவையான உணவை வழங்கினோம். தான் குணமாகியதும் எங்களுக்கு கொடநாட்டில் டீ விருந்தளிப்பதாக அவர் கூறியிருந்தார் என்று நர்ஸ் ரேணுகா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் அப்பல்லோ மருத்துவமனையின் மெடிக்கல் இயக்குனர் சத்யபாமா, நர்ஸ் சூப்பரெண்டெண்ட் சுனிதா, அவசர சிகிச்சை பிரிவு ஸ்பெஷலிஸ் பாபு கே.ஆபிரஹாம் உள்பட பலர் முதல்வருடனான அந்த நாட்கள் குறித்து சிலாகித்து கூறியுள்ளனர்.