முதல்வரை சந்திக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்: திரையரங்குகள் திறப்பது எப்போது?
- IndiaGlitz, [Wednesday,October 14 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாளை முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. 50 சதவீத இருக்கைகள் மட்டும் நிரப்ப வேண்டும், ஒவ்வொரு காட்சியின் போதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் உள்பட ஒரு சில நிபந்தனைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக அரசு இன்னும் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோர்களிடம் திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து திங்கட்கிழமை முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல்வர் பழனிசாமியை சந்திக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த சந்திப்பில் சுமூகமான முடிவு ஏற்படும் என்றும் திரையரங்குகள் தமிழகத்திலும் திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்