சிகிச்சையின்போது ஜெயலலிதா புகைப்படம் வெளியிடாதது ஏன்? அப்பல்லோ பதில் மனு தாக்கல்
- IndiaGlitz, [Thursday,February 23 2017]
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில் அப்பல்லோ மருத்துவமனை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் 'எம்.சி.ஏ விதிகளின்படி நோயாளி குறித்த விவரங்களை வெளியிடவில்லை என்றும், அதுமட்டுமின்றி புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் புகைப்படங்கள் வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ விதிமுறைகளின்படி சிகிச்சை விவரங்களை அளிக்க முடியாது என்றும் அப்பல்லோ அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டதால் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.