ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து வீடியோவை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

அப்பல்லோவில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்னை திரும்பினார். தற்போது அவர் முழு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் அரசியலில் குதிக்கும் முடிவையும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான வீடியோ ஒன்றில் ரஜினிகாந்த் கூறியதாவது: அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்கள் நர்ஸ்கள் ஆகிய அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் தற்போது நல்ல உடல் நிலையில் இருக்கிறேன். நல்ல மன நிம்மதியுடனும் இருக்கின்றேன். அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். அனைத்து வசதிகளும் நன்றாக உள்ளது. அனைவருக்கும் நன்றி’ என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.