ஜெயலலிதா வீடியோ உண்மையா? அப்பல்லோ விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,December 20 2017]
ஆர்.கே.நகர் இடைதேர்தலின் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்று வெளியான வீடியோ முற்றிலும் பொய்யானது என்று அதிமுகவின் முருகுமாறன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் இந்த வீடியோ குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியபோது, 'ஜெயலலிதா இல்லை என்பதால் வீடியோவை சசிகலாதான் எடுத்தார் என கூறுவதா? ஆதாரத்தை இதுவரை தராதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ தரப்பு கூறியபோது, 'இந்த வீடியோ ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோதான். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம்' என்று கூறியுள்ளது.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மேலும் சில வீடியோக்களும் சசிகலா வசம் இருப்பதாகவும், அதையும் அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் திட்டத்தில் தினகரன் தரப்பு உள்ளதாகவும் கூறப்படுவதால் இன்று முதல் இன்னும் சில நாட்களுக்கு பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது.