ஆந்திர முதல்வருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழக மாணவர்களின் போராட்டம்
- IndiaGlitz, [Wednesday,January 25 2017]
தமிழகத்தில் மாணவர்கள் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போராட்டம் கடைசியில் சில வன்முறையில் முடிந்தாலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. ஒரு முதல்வர் அவசர அவசரமாக டெல்லி சென்று மத்திய அரசுடன் பேசி, இரவோடு இரவாக அவசர சட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்து, அதை உடனே சிறப்பு சட்டமன்றத்தில் முன்வடிவு செய்யும் அளவுக்கு இந்த போராட்டத்தில் வீரியம் இருந்தது.
இந்நிலையில் தமிழக மாணவர்களின் வெற்றியை பார்த்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். குறிப்பாக ஆந்திராவில் தற்போது இளைஞர்கள் அனைவரும் பேஸ்புக் இணைப்பு மூலம் தொடர்பை ஏற்படுத்தி, ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரி விசாகப்பட்டிணம் ஆர்.கே. பீச்சில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் #APdemandsspecialstatus என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் உருவாக்கி அதை மிக வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
'நாமும் தமிழகத்தைப் போல நமது மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்காக அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்' என்று ஆந்திர இளைஞர்கள் எழுச்சி அடைந்து வருவதால் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பவன்கல்யாண் உள்பட ஆந்திர நடிகர்கள் மாணவர்கள் அமைதி வழி போராட்டத்தை ஆரம்பித்தால் அதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று கூறியுள்ளது சந்திரபாபு நாயுடுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.