நிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்!!!
- IndiaGlitz, [Saturday,June 06 2020]
அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தொடரும் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட போராட்டங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு தெரிவிக்கப் பட்டு வந்தன. இந்நிலையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் நிறவெறி கொடுமையானது எனக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் தொடரும் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறுவதை எதிர்த்து பல உலகத் தலைவர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்போது ஜெர்மனி அதிபர் இனவெறி கொடுமையானது என தெரிவித்து இருக்கிறார். மேலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களின்போது அதிபரின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பதையும் செய்தியாளர்கள் கேள்வியாக எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஏஞ்சலா “அது சர்ச்சையான ஒன்று” என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிபரின் அணுகுமுறை குறித்து தற்போது வெளிப்படையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கொரோனா விஷயத்தில் அவர் சரியாக செயல்பட தவறிவிட்டார் என்றும் அதேபோல இனவெறிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அதிபரின் கருத்து சர்ச்சைக்குரியவை என்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப் பட்டு வருகின்றன.