விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் அபர்ணா தாஸ் கேரக்டர் இதுதானா?

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அபர்ணாதாஸ் கேரக்டர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் அவர் இந்த படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்து விட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் சுஜாதா பாபு என்பவர் விஜய்யின் தாயாக நடித்து வருகிறார் என்று செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் இருந்தே நடித்து வரும் அபர்ண தாஸ், விஜய்யின் தங்கையாக நடித்து வருவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.