முதல்முறையாக கேமராவில் சிக்கிய அனுஷ்கா-கோலி தம்பதியினரின் மகள்… வைரல் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய முன்னணி வீரருமான விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினரின் செல்ல மகள் “வாமிகா“ புகைப்படம் தற்போது முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியைக் காதலித்து கடந்த 2017 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து இந்த ஜோடிக்கு கடந்த வருடம் அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும் தங்களது குழந்தைக்கு “வாமிகா“ எனப் பெயர் வைத்த இவர்கள் தங்களது மகளை ஊடகத்தின் வெளிச்சம் படாமலேயே வைத்திருந்தனர்.

இந்நிலையில் விராட் கோலி தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது மைதானத்தில் இருந்த கோலி அரைச்சதம் விளாசி தனது பேட்டை குழந்தையைப்போல தாலாட்டினார். இது அங்கிருந்தவர்கள் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தபோது பெவிலியனில் நின்றிருந்த அனுஷ்கா தனது கையில் வாமிகாவை வைத்துக்கொண்டு கோலியின் அரைசதத்தை கொண்டாடினார். இதனால் முதல் முறையாக வாமிகாவின் புகைப்படம் ஊடகத்தில் வெளியாகியது.

முன்னதாக தங்களது குழந்தைக்கு தனியுரிமை வேண்டும், ஊடகத்தின் வெளிச்சத்தை இப்போதே நாங்கள் விரும்பவில்லை எனக் கூறிக்கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக வாமிகாவின் புகைப்படம் தற்போது மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டைக் குவித்து வருகிறது.