முகக்கவசம் அணியாதவர்களுக்கு கல்லறைத் தோட்டத்தில் நூதன தண்டனை… வைரல் தகவல்???
- IndiaGlitz, [Wednesday,September 16 2020]
கொரேனா பரவலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த இறுதியான முடிவு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே தனிநபர் பாதுகாப்பு, சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை குறித்து மக்கள் மத்தியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு நூதனத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடி போலீஸாரிடம் மாட்டிக்கொண்டால் கல்லறைத் தோட்டத்தில் பிணக்குழியை வெட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை வரவழைக்க முடியும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இத்தண்டனை குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டு அதிகாரி ஒருவர், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முகக்கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் “கொரோனா காலத்தில் முகக்கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.