5ஆம் தேதி திருமணம், 9ஆம் தேதி வரை ஜெயில்: மது ஒழிப்பு போராளி நந்தினியின் நிலை

  • IndiaGlitz, [Saturday,June 29 2019]

மது ஒழிப்புக்காக மாணவர் பருவம் முதல் போராட்டம் செய்து வரும் நந்தினிக்கு வரும் ஜூலை 5ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில் அவரை ஜூலை 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோதே மதுவுக்கு எதிராக தனது தந்தையுடன் போராடி வருபவர் நந்தினி. தற்போது வழக்கறிஞராக இருந்து வரும் நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.

இந்த விசாரணையின்போது ஐ.பி.சி. 328ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றம் என்று நீதிபதியிடம் வாதாடினார். இதனையடுத்து நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை ஜூலை 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நந்தினி கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றம், நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பல்வேறு தரப்பினர் சர்ச்சைக்குரிய கருத்து கூறிக்கொண்டு வரும் நிலையில் திருமணத்தை எதிர்கொண்டுள்ள நந்தினியை சிறையில் அடைத்திருப்பதற்கு சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.