வரலாற்றிலேயே அதிமாக பதிவான வெப்பநிலை.. உருகும் அண்டார்டிகா.. திணறப்போகும் உலகம்..!
- IndiaGlitz, [Saturday,February 08 2020]
காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.
அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புவியின் தென்பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகா எப்போதும் உறைந்த கண்டமாகவே காட்சியளிக்கும். உலகிலேயே அதிகமான நன்னீர் பனிப்பாறைகள் அங்குதான் உள்ளன. சுமார் 70 சதவீத நன்னீர் அண்டார்டிகாவில் உள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்க பெரும் கவசமாக செயல்படும் அண்டார்டிகா அதன் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
உலகிலேயே கோடைக்காலங்களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தான் அதிக வெப்பத்தைச் சந்திக்கும். சுமார் 39 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமே அதிகம் எனக் கூறபடும் நிலையில், அந்த வெப்பத் தாக்கதை விட அதிக வெப்பத்தை அண்டார்டிகா சமீபத்தில் சந்தித்துள்ளது. அதாவது அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவில் 65 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த தகவலை அண்டார்டிகாவின் டிரினிட்டி தீபகற்பத்தில் உள்ளா எஸ்பெரான்சா பேஸ் (Esperanza Base) பகுதியில் இருக்கும் அர்ஜென்டினா ஆய்வு மையம் பதிவுசெய்து வெளியிட்டுள்ளது. இந்த தகவலை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டாலும் இந்த வெப்பநிலைக்கு சாத்தியம் இருப்பதாக உலக வானிலை அமைப்பும் தெரிவித்துள்ளது.
இந்த வெப்பநிலை அதிகரிப்பதால் அதிகளவிலான பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடல்நீர் மட்டம் உயரும். அதுமட்டுமின்றி காலநிலை மாற்றம் மனிதர்களுக்கான சுகாதாரம் சார்ந்து கடந்த 70 ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று கடந்த மாதம் லான்செட் ஆய்வு அறிக்கை தெளிவாக்கியது.
மேலும் புதுப்புது வைரஸ் கிருமிகள் மனித குலத்தை தாக்குமென்றும், அதனை கட்டுப்படுத்த வழிவகை இல்லாமல் போகும் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தது அந்த ஆய்வு. பனிப்பாறைகள் உருக உருக இதுகாறும் வெளியேவராமல் இருந்த வைரஸ் கிருமிகள் புதிதாக வெளிவருமென்றும் தெரிவித்திருந்தது ஆய்வு. ஏந்திகள் வழி பரவும் நோய்கள் (vector borne diseases) அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.