ராகவா லாரன்ஸின் அடுத்த ரூ.25 லட்சம் நிதியுதவி:
- IndiaGlitz, [Friday,April 17 2020]
கொரோனா வைரஸ் காரணமாக முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கும் என்பதால் அதுவரை திரைப்பட படப்பிடிப்பு எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரடங்கு உத்தரவால் நலிந்த நடிகர்கள் குறிப்பாக நாடக நடிகர்கள் பலர் வேலையின்றி வருமானமின்றி பசியால் வாடுகின்றனர். பெப்சி அமைப்புக்கும், நடிகர் சங்கத்துக்கும் ஒரு சில நடிகர்கள் நிதி உதவி செய்து வந்த போதிலும் இன்னும் பல நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் வறுமையில் வாடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே 3 கோடி ரூபாய் நிதி உதவி செய்த நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சமும் சென்னை செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்தினர் நலனுக்காக ரூ.15 லட்சமும் அளித்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மேலும் நலிந்த நடிகர்கள் கஷ்டப்படுவது கேள்விப்பட்டு தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் ரூபாய் 25 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மேலும் பலர் சங்கத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படுவதாக தனக்கு தகவல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தன்னைப்போலவே உதவும் மனம் உள்ளவர்கள் தன்னுடன் சேர்ந்துகொண்டு வறுமையில் வாழ்பவர்களை காப்பாற்றலாம் என்றும் ஒரு ரூபாய் கொடுப்பவர்கள் கூட தற்போது முக்கியம் என்பதால் அனைவரும் தன்னுடன் இணைந்து கொள்ளலாம் என்றும் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.