பொங்கலுக்கு முன் மீண்டும் ஒரு புயல். சென்னை தாங்குமா?
- IndiaGlitz, [Monday,January 02 2017]
கடந்த மாதம் 12ஆம் தேதி வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை உள்பட மூன்று மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. லட்சக்கணக்கான மரங்கள் வேறோடு வீழ்ந்து சென்னை நகரமே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. இண்டர்நெட் சேவையும் அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை நகரம் ஓரளவு மீண்டுவிட்டாலும் புறநகர் பகுதிகளில் இன்னும் மின்சாரம் இல்லாத ஒருசில பகுதிகள் உள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் புதிய புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டி உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக வலுப்பெற்று, வட கிழக்கில் நகர்ந்து அந்தமான் அருகே வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு புயல் உருவானால் ஜனவரி 11ஆம் தேதி சென்னை, நெல்லூர் அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையத்தினர் கணித்துள்ளனர். எனவே மீண்டும் ஒரு புயலை சென்னை தாங்குமா? அல்லது புயல் திசைமாறி செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.