சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை.. 3 மாதத்தில் 4 தற்கொலைகள்..!

  • IndiaGlitz, [Saturday,April 22 2023]

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடியில் கடந்த சில மாதங்களாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து மாணவர்களுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கவுன்சிலிங் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை ஐஐடியில் இரண்டாம் ஆண்டு பிடெக் படித்துக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள காவிரி விடுதியில் தங்கி இருந்த கேதார் சுரேஷ் என்ற 20 வயது பிடெக் மாணவர் மாணவரின் அறை பல மணி நேரமாக பூட்டி இருந்ததை அடுத்து அவரது நண்பர்கள் வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவர் கேதார் சுரேஷ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்துக் கொண்டிருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின் குமார் கடந்த மாதம் 31 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை ஐஐடி மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதை எடுத்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கவுன்சிலிங் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.