ஆம்பன் புயலை அடுத்து இந்தியாவை தாக்க இருக்கும் இன்னொரு சூறாவளி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் அடுத்த வாரத்தில் பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இந்தக் காற்றழுத்தத்தால் உருவாகும் சூறாவளி மிகவும் வலுவற்றதாக இருந்தாலும் மேற்கு கடற்கரைப் பகுதியில் இதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் கிழக்கில் ஆம்பன் புயல் உருவாக்கியத் தாக்கத்தை இதுவரை சரிசெய்ய முடியாமல் பல மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கும்போது இந்தியாவின் மேற்கில் இன்னொரு புயல் மழை உருவாகி கொண்டு இருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் கடற்கரை பகுதிகள் கடுமையான தாக்கத்தை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது. அரபிக்கடல் பகுதியின் கிழக்கு மற்றும் கோவா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு இருப்பதாகவும் வானிலை மண்டல ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. இது கோவாவில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவிலும் மும்பையின் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிலும் மோசமான வானிலையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது 11 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி பயணிக்கிறது என்றும் இதனால் செவ்வாய் கிழமையான இன்று சூறாவளி புயலாகவும் நாளை கடுமையான சூறாவளி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை மதியத்திற்குள் இந்த புயலின் மையம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் தெற்கு கடற்கரை நோக்கி நகர்ந்து செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் நிலச்சரிவு போன்ற அபாயங்கள் குஜராத் கடற்கரை பகுதிகளில் ஏற்படலாம் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மழைக்காலம் தொடங்கியிருக்கிறது என்றாலும் தற்போது உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிகம் மழை பொழிவு இருக்கும் இடங்களில் முன்பிருந்ததை விட சற்று கூடுதலான மழை பொழியவும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. தலைநகர் டெல்லியில் இந்த காற்றழுத்தத்தால் 5-7 சென்டிமீட்டர் மழை பொழிவு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் புயலைத் தவிர ஏற்கனவே தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஆரம்பித்து விட்டது. இந்த மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்தியாவில் தற்போது உருவாகி இருக்கும் தென்மேற்கு பருவ மழையால் இந்த மாதம் மட்டும் 102 மில்லி மீட்டர் மழையும் அடுத்த மாதம் 103 மில்லி மீட்டர் மழைப் பொழிவும் ஆகஸ்டில் இந்த அளவு 97 மில்லி மீட்டராக குறைந்து காணப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments