'அண்ணாத்த' ரிலீஸில் திடீர் திருப்பம்: 'எனிமி'க்கு சிக்கலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீஸர் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் மிக அதிக அளவிலான திரையரங்குகள் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததைவிட கூடுதலான திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு பெரும்பாலான திரையரங்குகள் புக் செய்யப்பட்டால் தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டுள்ள ’எனிமி’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா? அல்லது ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.