வளர்மதியை அடுத்து மீண்டும் ஒரு மாணவர் கைது
- IndiaGlitz, [Saturday,July 22 2017]
சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி என்பவர் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் மக்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வளர்மதி கைது செய்யப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு இன்னும் அடங்காத நிலையில் தற்போது போராட்டத்திற்கு ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுவித்த ஆராய்ச்சி பட்ட மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டத்திற்கான மாணவர் 32 வயது குபேரன் என்பவர் தனது ஃபேஸ்புக்கில் போராட்டம் குறித்த பதிவு ஒன்றை போட்டுள்ளார். கதிராமங்கலம் பிரச்சனை தொடர்பாகவும், மீத்தேன் திட்டத்தை கைவிட கோரியும், ஏற்கனவே இந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன், விடுதலைச்சுடர் ஆகியோர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு குபேரன் தனது பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
குபேரனின் ஃபேஸ்புக் பதிவை அறிந்த சிதம்பரம் போலிசார் அவரை போராட்டத்தை தூண்டியதாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் குபேரன் தமிழ் தேசிய பேரியக்கத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. குபேரனின் கைது நடவடிக்கைக்கு இந்த இயக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.