சூர்யாவின் நீட் குறித்த பார்வை அடுத்த ஆண்டு மாறும்: பாஜக பிரபலம் நம்பிக்கை 

சமீபத்தில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதும் இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சூர்யாவின் அறிக்கை குறித்து ஏற்கனவே காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பல பாஜகவினர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் சூர்யா நல்ல நடிகர், நல்ல மனிதர், அவருக்கு கருத்துக் கூறும் உரிமை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவின் கருத்து கடுமையாக இருந்ததாகவும், சூர்யா போன்ற நடிகர்கள் இவ்வாறு கருத்து கூறும்போது அது அதிக நபர்களை சென்றடையும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு குறித்த சூர்யாவின் பார்வை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் பெரும்பாலும் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது என்றும் 180 கேள்விகளில் 173 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் தான் கேட்கப்பட்டு உள்ளதால் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு மிக எளிதாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது ’ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருக்கான இடம் தமிழகத்தில் கட்டாயம் உள்ளது என்றும், அடிப்படையில் பாஜகவும் ரஜினியும் அரசியலும் ஒருமித்த கருத்தைக் கொண்டது என்றும் தெரிவித்தார். வருங்காலங்களில் ரஜினியுடனான கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.