இனி ஆண்களும் சமைக்கனும்… திட்டத்தை வரவேற்ற பிரபல பெண் தயாரிப்பாளர்!
- IndiaGlitz, [Tuesday,December 14 2021]
பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்களுக்கும் சமையல் மற்றும் வீட்டு பராமரிப்பு குறித்த பயிற்சியை வழங்குவதற்காக கேரள அரசு புது திட்டத்தை வகுத்து இருக்கிறது. மாநிலச் சட்டச்சபையில் விவாதிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு மலையாள சினிமா தயாரிப்பாளர் அஞ்சலி மேனன் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் “பெங்களூரு டேஸ்“. இந்தப் படத்தை தயாரித்த பெண் தயாரிப்பாளர் அஞ்சலி மேனன் சமீபத்தில் நடிகர் பிருத்திவிராஜ், நஸ்ரியா நடிப்பில் உருவான “கூடே“ படத்தை தயாரித்து இருந்தார். அவர் தற்போது கேரள அரசு கொண்டுவந்துள்ள ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தை வரவேற்று கருத்துத் தெரிவித்து உள்ளார்.
வீட்டு சமையல் அறைகளை ஸ்மார்ட் கிச்சனாக மாற்றுவதன் மூலம் பெண்களின் வேலை நேரத்தை குறைப்பது மேலும் ஆண்களுக்கும் வீட்டு பராமரிப்பு, சமையல் போன்ற கலைகளைக் கற்றுக்கொடுத்து அவர்களிடையே சமையல் பற்றிய அடிப்படை திறனை வளர்ப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு கேரள அரசு புதுத் திட்டத்தை வகுத்து இருக்கிறது.
இதன்மூலம் ஆண்களுக்கு சமையல், வீட்டுப்பராமரிப்பு குறித்து விஷேச முறையில் பயிற்சி வழங்கப்படும். மேலும் பெண்கள் தங்களுடைய சமையல் அறையை நவீனமாக மாற்றுவதற்கு ஏற்ப கடன் உதவிகள் வழங்கப்படும். மாநில அரசே வழங்கும் இந்தக் கடனை தவணை முறையில் கட்டுவதற்கும் வழிவகைச் செய்யப்பட்டு உள்ளது.
சமையல் மற்றும் வீட்டுப்பராமரிப்பு அனைத்தும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையாக காலம்தோறும் கருதப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை வீட்டு சமையல் அறையிலேயே கழித்து வருகின்றனர்.
இதற்கு மாறாக ஆண்களும் சமையல், வீட்டுப் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், அவர்களை இதுபோன்ற அடிப்படைய திறன் கொண்ட வேலைகளில் ஈடுபடுத்தும் விதமாக கேரள அரசு ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ளகேரள அரசின் இந்த முயற்சிக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் அஞ்சலி மேனன் வரவேற்பு அளித்திருக்கிறார்.