அஞ்சலியின் அசரவைத்த ஆறு கேரக்டர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் கவர்ச்சியை மட்டும் நம்பியிருக்காமல் நடிப்பையும் வெளிக்காட்டி வெற்றி பெற்ற ஒருசில நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர் நடித்த மிகச்சிறந்த ஆறு கேரக்டர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
'கற்றது தமிழ்' - ஆனந்தி: ஜீவா நடிப்பில் ராம் இயக்கிய இந்த படத்தில் தான் ஆனந்தி என்ற கேரக்டரில் அறிமுகமானார் அஞ்சலி. இந்த படம் அஞ்சலிக்கு முதல் படமா? என்று கேட்கும் அளவுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த நடிகைக்கு இணையாக அஞ்சலி நடித்திருப்பார். குறிப்பாக அவ்வப்போது அவர் பேசும் 'நிஜமாத்தான் சொல்றியா' என்று அப்பாவித்தனமாக பேசும் வசனத்தை யாராலும் மறக்க முடியாது. பக்கத்து வீட்டு பெண் போன்ற இந்த ஆனந்தி கேரக்டர் ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்க அஞ்சலிக்கு உதவி செய்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
'அங்காடித்தெரு' - கனி:
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
இந்த படத்தில் இடம்பெற்ற 'கனி' கேரக்டரை நான்கே வரிகளில் பாடலாசிரியர் நா.முத்துகுமார் ரசிகர்களுக்கு புரிய வைத்திருந்தார். சென்னை வணிக வளாகம் ஒன்றில் கிட்டத்தட்ட கொத்தடிமையாக வேலை பார்க்கும் பெண்களில் ஒருவர்தான் இந்த 'கனி'. ஆனாலும் அதிலும் ஒரு காதல், சோகம், நகைச்சுவை நிரம்பிய இந்த கேரக்டர் அஞ்சலியை ஒரு முழு நடிகையாக உருவாக்கியது என்று கூறலாம். அஞ்சலியை முன்னணி நடிகையாக மாற்றியது இந்த படம் தான் என்றால் அது மிகையில்லை.
'எங்கேயும் எப்போதும்' - மணிமேகலை: அஞ்சலியின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் தான் 'எங்கேயும் எப்போதும்'. ஜெய்யுடன் அஞ்சலி நடித்த முதல் படம். சற்றே துடுக்கும், மிடுக்கும் மிகுந்த இந்த மணிமேகலை கேரக்டர் அப்பாவி ஜெய்யை சில பல அலைக்கழிப்புகளுக்கு உள்ளாக்கி பின்னர் காதலுக்கு பச்சை கொடி காட்டும் ஒரு கேரக்டர்.
'கலகலப்பு' - மாதவி: நடிப்பு மட்டுமின்றி கவர்ச்சியாலும் கலக்க முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் அஞ்சலி நடித்த படம் இது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் கவர்ச்சியாக நடித்திருந்த இந்த படத்தில் மாதவி கேரக்டர் அஞ்சலிக்கு நிச்சயம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்திருக்கும்.
சகலகலாவல்லவன் - அஞ்சலி: சுராஜ் இயக்கிய இந்த படத்தில் த்ரிஷா மெயின் நாயகி என்றாலும் அஞ்சலிக்கும் பேர் சொல்லும் வகையில் அமைந்த கேரக்டர்தான். காமெடி மற்றும் கவர்ச்சி ஆகிய இரண்டையும் சம அளவில் வெளிப்படுத்தி அஞ்சலி நடித்த படம் .
இறைவி - பொன்னி: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஞ்சலியின் கேரக்டர் மிக அழுத்தமான கேரக்டர்களில் ஒன்று. கிட்டத்தட்ட நவீன காலத்து கண்ணகி கேரக்டர் என்று சொல்லலாம். முதல் காட்சியில் பள்ளிக்கூட யூனிபார்மில் கையை அப்படியே வெளியில் நீட்டி மழையில் நனையும் காட்சியிலும் சரி, கிளைமாக்ஸில் அதே சுதந்திரத்துடன் மழையில் நனையும் காட்சியிலும் சரி, அஞ்சலியை தவிர இந்த கேரக்டரை வேறு யாரும் செய்ய முடியாது என்பதை உணர்த்திய படம் தான் 'இறைவி'.
அஞ்சலி போன்ற நடிப்புத்திறமை உள்ள நடிகையை வெறும் கவர்ச்சி, காமெடிக்கு மட்டும் பயன்படுத்தாமல் நடிப்புக்கு தீனி கொடுக்கும் வகையிலான கேரக்டர்களுக்கு அவரை இயக்குனர்கள் பயன்படுத்தினால் நிச்சயம் அஞ்சலியின் திரையுலக கிராப்பில் முன்னேற்றம் இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout