கருப்புச்சட்டை போட்டவர்களை எல்லாம் விசாரிக்கும் காவல்துறை: மெரீனாவில் பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,September 02 2017]
மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த போராட்டத்தீ மெரீனாவுக்கும் பரவிவிட கூடாது என்பதால் நேற்று மாலை முதலே போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மெரினாவில் கருப்புச்சட்டை அணிந்து வருபவர்களையெல்லாம் பிடித்து காவல்துறை விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சாதாரணமாக மெரீனா கடற்கரைக்கு வருபவர்கள் கருப்புச்சட்டை அணிந்திருந்தால் கூட அவர்கள் மீது சந்தேகப்பார்வை படும் அளவிற்கு காவல்துறையினர் கெடுபிடி செய்வதாக மெரீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மேலும் ஒரு போராட்டம் ஏற்படாமல் காவல்துறையினர் மூலம் தடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையில் ஒருசிறு பகுதியாவது அனிதா போல் இன்னொரு உயிர் போகக்கூடாது என்பதிலும் இந்த அரசு காட்டவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.