மறுபடியும் வர்றோம், இந்த வாட்டி லைட் ஹார்ட்டோட: தனுஷ் குறித்து அனிருத்

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அனிருத் தனது இசைப்பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘ 2012ஆம் ஆண்டு 20 வயதில் என்னால் ஒரு படத்திற்கு இசை அமைக்க முடியுமா என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தது. அதற்கு காரணம் தனுஷ். நமக்கு பிடித்த விஷயத்தை நாம் பிடித்த மாதிரி செய்யும்போது நம்மை எல்லோருக்கும் பிடிக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

இந்த பயணத்தில் இசை தான் என் வாழ்க்கை என்பதை புரிய வைத்தார் ஒருத்தர், அவர் தான் தனுஷ். நினைத்து பார்ப்பதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது. இப்போ மறுபடியும் வர்றோம், லைட் ஹார்ட்டோட. ஜாலியாக சந்தோஷமாக வர்றோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இதிலிருந்து நாளை நடைபெற இருக்கும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மித்ரஜ் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.