இளைஞர்களின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானிக்கு ஒரு 'அன்னக்கிளி', ஆஸ்கார் நாயகருக்கு ஒரு 'ரோஜா', அதுபோல் ராக்ஸ்டார் அனிருத்துக்கு ஒரு '3'. ஆம் ஒரு இசையமைப்பாளரின் முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது என்றால் அவருடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு உதாரணம் இந்த மூவர்.
முதல் படத்திலேயே அதிலும் முதல் பாட்டிலேயே உலகப்புகழ் பெற்ற அனிருத்துக்கு IndiaGlitz சார்பில் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
மாமா ரஜினி திரையுலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார், நெருங்கிய உறவினர் தனுஷ் கோலிவுட்டின் முன்னணி நடிகர், இருந்தும் தனது டீன் ஏஜ்களில் திருமணங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார் அனிருத். தனது இசையின் மீது அபாரமான நம்பிக்கை, தன்னுடைய வாழ்க்கையை இசை காப்பாற்றும் என்ற மன உறுதி அவரை இன்று ராக்ஸ்டார் ஆக்கியுள்ளது.
அனிருத்தின் இசை திறமையை கண்டுபிடித்து கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒருவராக வருவார் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அனிருத்துக்கு கீபோர்டு வாங்கி கொடுத்தவர் தனுஷ். அதுமட்டுமின்றி தனது படமான '3' படத்திற்கு இசையமைப்பாளர் வாய்ப்பையும் கொடுத்தார். முதல் படத்தின் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதை உணர்ந்த அனிருத் தனது முழு இசை அறிவையும் பயன்படுத்தி போட்ட பாடல்தான் 'ஒய் திஸ் கொலைவெறி'
அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இருந்து திருடு போகிறது. ஃபைனல் வெர்ஷன் இல்லாத அந்த பாடல் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டாக, உடனே தனுஷ் அந்த பாடலை அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்தார். தனுஷ் குரலில் அனிருத் இசையில் பாடல் முழுமை பெற்று யூடியூபில் வெளியானது.
இந்த பாடல் வெளியானதும் தமிழகத்தின் கடைகோடி பாமரனில் இருந்து உலகின் முன்னணி பாடகியாக பிரிட்னி ஸ்பியர்ஸ் வரை அனைவரின் உதடுகளும் இந்த பாடலை ஒலித்தன. ஒய் திஸ் கொலைவெறி என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் உலகின் பல நாடுகளில் இந்த பாடல் ஒலித்தது. படம் வெளிவந்த போது இந்த பாடலுக்கு தியேட்டரே அதிரும் வகையில் ரசிகர்களின் ரியாக்சன் இருந்தது. ஒரே படத்தில் உலகப்புகழ் பெற்றுவிட்ட அனிருத், பின்னர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஆகிவிட்டார்.
ஒரு துடிப்புள்ள இளைஞர் முதல் படத்தில் வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயமே இல்லை. ஆனால் அடுத்தடுத்து அந்த வெற்றியை தக்க வைத்து கொள்வதில்தான் பலர் தடுமாடுகின்றனர். அந்த தவறு அனிருத் விஷயத்தில் நடக்கவில்லை. முதல் படத்திற்கு இணையாக அவர் இசையமைத்த இரண்டாம் படமான 'எதிர்நீச்சல்' படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக கவிஞர் வாலி எழுதிய 'எதிர்நீச்சலடி' என்ற பாடல் சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பி கேட்கும் ஒரு தன்னம்பிக்கையை ஊட்டும் ஒரு பாடலாக அமைந்தது.
அனிருத்தின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு என்றால் அது 2014ஆம் ஆண்டாகத்தான் இருக்க வேண்டும். இந்த ஆண்டில்தான் அவர் இசையமைத்த 'வேலையில்லா பட்டதாரி', 'மான் கராத்தே', 'கத்தி', காக்கிச்சட்டை' என நான்கு படங்கள் வெளிவந்தது. வேலையில்லா பட்டதாரி' படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்றுவரை பிரபலம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அனிருத் இல்லாததது படத்திற்கு எந்த அளவுக்கு இழப்பு என்பதை சமீபத்தில் அனைவரும் உணர முடிந்தது
அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் அனிருத்துக்கு மட்டுமின்றி விஜய்க்கும் ஒரு புதுமையான அனுபவமாகத்தான் இருந்திருக்கும். எப்போது என்றால் 'செல்பி புள்ள' பாடலை பாடியபோது. அதேபோல் சிவகார்த்திகேயன் - அனிருத் காம்பினேஷனும் ஒரு புதிய கெமிஸ்ட்ரியை உருவாக்கியது என்பது 'மான் கராத்தே', 'காக்கி சட்டை' படங்களின் வெற்றி உணர்த்தியது
மீண்டும் தனுஷுடன் இணைந்த 'மாரி' திரைப்படத்தின் அட்டகாசமான பின்னணி இசையையும், பாடல்களையும் இன்றும் இளைஞர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை மனதில் வைத்து 'விஐபி 2' படத்தில் செய்த தவறை 'மாரி 2' படத்தில் தனுஷ் செய்ய மாட்டார் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்ரனர்.
அதேபோல் விஜய்சேதுபதி நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அனிருத் மிக முக்கிய காரணம் ஆவார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அனிருத்துக்கு கிடைத்த இன்னொரு பொன்னான வாய்ப்பு தல அஜித்தின் 'வேதாளம்'. ஒய்திஸ் கொலைவெறி பாடல் எந்த அளவுக்கு உலகம் முழுவதும் ஹிட் ஆனதோ, அதேபோல் 'ஆலுமா டோலுமா' பாடலும் ஹிட் ஆனது.
அதன் பின்னர் அனிருத் இசையமைத்த 'தங்கமகன்' மற்றும் 'ரம்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் மீண்டும் 'ரெமோ' படத்தின் மூலம் தனது வழக்கமான புகழை பெற்றார். இந்த படத்தில் இடம்பெற்ற 'செஞ்சிட்டாலே' மற்றும் 'சிரிக்காதே' பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது
சமீபத்தில் வெளியான தல அஜித்தின் 'விவேகம்' பாடலில் உலக தரத்தில் பின்னணி மற்றும் ஆட்டம் போட வைக்கும் பாடல்களை கொடுத்து அசத்தியுள்ளார் அனிருத். தல விடுதலை' பாடலுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் போட்டதே இதற்கு சான்று. அதேபோல் 'சர்வைவா' பாடலும் பயங்கர ஹிட்.
இன்றைய இளைஞர்களுக்கு இன்ஸ்பிரஷனாக இருக்கும் அனிருத் இசையமைப்பில் மட்டுமின்றி பாடகராகவும் புகழ்பெற்றார். அவரது உச்சஸ்தாய குரலை கண்டு ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்கள் பாட வாய்ப்பு கொடுத்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய 'மெரசலாயிட்டேன்' பாடல், மிகப்பெரிய ஹிட்டானது
இளம் வயதில் மிகப்பெரிய சாதனைகளை செய்து அதை தக்க வைத்து கொண்டு வரும் அனிருத், நிச்சயம் ஒருநாள் உலகின் மிகச்சிறந்த விருதை தனது இசைக்காக பெறுவார். அந்த நாளை எதிர்பார்த்து ராக்ஸ்டார் காத்திருக்கின்றாரோ இல்லையோ, அவரது ரசிகர்கள் நிச்சயம் காத்திருப்பார்கள். அனிருத்துக்கு மீண்டும் ஒருமுறை எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments