இந்த ஆண்டு பத்ம விருதை நிராகரித்த சினிமா பிரபலங்கள்!
- IndiaGlitz, [Thursday,January 27 2022]
குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. கலை, இலக்கியம், மருத்துவம், சமூகச்சேவை போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்த 128 பேருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு சினிமா பிரபலங்கள் இந்த விருதை நிராகரித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான புத்தத்தேவ் பட்டாச்சாரியா தனக்கு வழங்கப்பட இருந்த “பத்மபூஷன்“ விருதை நிராகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் பாடகி சந்தியா முகர்ஜியும் தனக்கு வழங்கப்பட இருந்த “பத்மஸ்ரீ“ விருதை நிராகரித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், 90 வயதைக் கடந்த நிலையில் பத்மஸ்ரீ விருது பெறுவது அவமானம் என்றும் இளம் தலைமுறையினருக்கு வழங்குங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சிறுவயதிலேயே பல சினிமா பிரபலங்கள் பத்மஸ்ரீ விருதுகளைத் தட்டிச்செல்லும்போது மூத்தக் கலைஞர்களுக்கு காலம் கடந்து பத்மஸ்ரீ விருது வழங்குவதா? எனும் நோக்கில் பாடகி சந்தியா இந்த விருதைத் தட்டிக்கழித்துள்ளார்.
இதே கருத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் அனிந்தியா சட்டர்ஜியும் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை நிராகரித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தக் கவுரவத்தை ஏற்கவேண்டும் என்று டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. இதற்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் நேர்மையாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டேன். விருதுபெறும் கட்டத்தை நான் கடந்துவிட்டேன்“ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 சினிமா பிரபலங்கள், மூத்தக் கலைஞர்களான எங்களுக்குக் காலம் கடந்து பத்மஸ்ரீ விருது வழங்குவதா? என நிராகரித்து இருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.