நான் பதவி விலக கோஹ்லியே காரணம்! கும்ப்ளே மறைமுக குற்றச்சாட்டு
- IndiaGlitz, [Wednesday,June 21 2017]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில்கும்ப்ளே பதவியேற்றதில் இருந்தே இந்திய அணி வியக்கத்தக்க முன்னேற்றங்களை பெற்று வந்தது. சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி போட்டி தவிர இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது என்று கூறலாம். இருப்பினும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கேப்டன் விராத்கோஹ்லிக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாகவே செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியை இருவருமே ஊடகங்களில் மறுத்து வந்த நிலையில் நேற்று கும்ப்ளே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் போட்டியிலும் இடம்பெற்றிருந்த கும்ப்ளே திடீரென பதவி விலகியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் தனது ராஜினாமா குறித்து டுவிட்டரில் விளக்கமளித்த கும்ப்ளே, தனது ராஜினாமாவிற்கு கேப்டன் விராத்கோஹ்லி உடனான கருத்துவேறுபாடே காரணம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய அணுகுமுறை குறித்து கேப்டன் விராத் கோஹ்லிக்கு மாற்று கருத்து இருப்பதை பிசிசிஐ மூலம் தற்போது தான் தெரிந்து கொண்டதாக கூறிய கும்ப்ளே, கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் உள்ள எல்லை வரையறையை மதிப்பவன் என்ற முறையில் தான் பதவி விலகுவதே சரி என்ற முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அணியின் தரம் உயரும் என்றும், கருத்துவேறுபாடு ஏற்பட்டவுடன் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வாரியம் விரும்பும் நபரிடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என்று முடிவு செய்து பதவி விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதுநாள் வரை தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்வதோடு கிரிக்கெட்டுக்கான எனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வழங்குவேன் என்று உறுதி கூறுவதாகவும் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.