ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்த அனில் கும்ப்ளே… என்ன காரணம்?
- IndiaGlitz, [Tuesday,July 06 2021]
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழல்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆந்திராவில் புதிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று அமையவுள்ளது. இந்த விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைக் குறித்து அனில் கும்ப்ளே, ஆந்திர முதல்வருடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்கு தனது முழு ஆதரவைத் தருவதாகக் கூறிய அவர், அதன் பயிற்சி மற்றும் நிர்வாகத்தில் முழு பங்களிப்பை தன்னால் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மேலும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்களை ஆந்திராவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் அதற்கான தொழிற்சாலைகளை இங்கேயே உருவாக்கலாம் எனவும் ஆலோசனை கூறி இருக்கிறார்.
இதற்காக ஜலந்தர் மற்றும் மீரட்டில் உள்ள விளையாட்டு உபகரண தொழிற்சாலைகளைப் பற்றியும் அனில் கும்ப்ளே சுட்டிக் காட்டியுள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே ஸ்பின்னர் என்ற பெருமையைக் கொண்டவர்.
மேலும் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலகச் சாதனையைப் படைத்தவர். கோலி கேப்டனாக இருந்த கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. தற்போது ஆந்திராவில் அமையவுள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு தனது முழு ஒத்துழைப்பை தருவதாக அவர் நம்பிக்கை தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.