ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்
- IndiaGlitz, [Thursday,May 24 2018]
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதி மக்களின் விலை மதிப்பில்லாத 13 உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே அந்த 13 ஆன்மாக்கள் சாந்தியடைய ஒரே வழி என்று தொடர்ந்து அந்த பகுதி மக்கள் ஆலையை மூட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் லைசென்ஸை புதுப்பிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறுத்ததோடு இன்று காலை அந்த ஆலையின் மின் இணைப்பையும் துண்டிக்க வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இந்த ஆலை விரைவில் மூடப்படும் என்று அந்த பகுதி மக்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்று ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பேட்டி ஒன்றில் ' ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்' என்று கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் இந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்' என்று கூறியுள்ளார்.