உக்ரைன் நாட்டிற்குப் திடீர் பயணம் மேற்கொண்ட பிரபல நடிகை… என்ன காரணம்?
- IndiaGlitz, [Sunday,May 01 2022]
கடந்த 2 மாதங்களாக போர் பிடியில் சிக்கி தவித்துவரும் உக்ரைனுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரபரபாகப் பேசப்பட்டு வருகின்றன.
ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜுலி நடிப்பைத் தவிர சமூகச் செயல்பாடுகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் சிறப்பு தூதுவராகப் பணியாற்றி இவர் தற்போது போரால் சின்னாபின்னமாகி இருக்கும் உக்ரைனுக்குக் கடந்த சனிக்கிழமை அன்று சென்றுள்ளார்.
மேலும் லிவிங் நகரத்திற்கு சென்ற ஏஞ்சலினா அங்குள்ள ரயில் நிலையங்களிலும், சிறுசிறு கடைகளிலும் கூடியிருந்த குழந்தைகளைச் சந்தித்து உரையாடினார். தொடர்ந்து லிவிங் நகரில் பணியாற்றிவரும் மனநல மருத்துவர்களிடம் உரையாடிய அவர் குழந்தைகள் கடுமையான அச்சத்தில் இருப்பதாகவும் அவர்களின் மனநிலை மாற்றங்கள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதால் இதுவரை 12.7 மில்லியன் மக்கள் அதாவது அந்நாட்டின் 30% மக்கள் தங்களது சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு நடிகை ஏஞ்சலினா பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் உரையாடியுள்ளார். மேலும் இவர் சமீபத்தில் மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ஏமன் நாட்டிற்கு பயணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.