அடையாளம் தெரியாத பிணத்தை 2 கி.மீ தோளில் சுமந்த பெண் எஸ்.ஐ… குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Tuesday,February 02 2021]
ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பெண் எஸ்.ஐ ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று அதை விசாரணை செய்ததோடு பிணத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அப்போது பிணத்தைத் தூக்குவதற்கு பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறார் அந்த பெண் காவலர். ஆனால் அச்சம் காரணமாக பொதுமக்கள் உதவிக்கு வராத நிலையில் அவரே 2 கி.மீ வரை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்து இருக்கிறது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாச மண்டலம் காசிபுக்கு நகராட்சிக்கு உட்பட்ட அடவி கொத்தூர் கிராமத்தின் விவசாய நிலத்தில் சடலம் கிடந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றார் காசிபு காவல் நிலைய பெண் எஸ்-ஐ சிரிஷா. பின்னர் அந்த பிணத்தை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்த அவர் பொதுமக்களை உதவிக்கு வருமாறு அழைத்து இருக்கிறார். யாரும் முன்வராத நிலையில் ஸ்ட்ரச்சரில் உடலை வைத்து மற்றொருவரின் உதவியுடன் 2 கி.மீ வரை இடுகாட்டிற்குத் தூக்கிச் சென்று அடக்கம் செய்து இருக்கிறார்.
இப்படி பெண் காவலர் ஒருவர் பிணத்தைத் தூக்கிச் சென்றதைப் பார்த்த பொதுமக்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது. இந்நிலையில் பெண் காவலர் சிரிஷாவிற்கு டிஜிபி கௌதம் சவாங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.